புதிய கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார் அமரிந்தர் சிங்...!


புதிய கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார் அமரிந்தர் சிங்...!
x
தினத்தந்தி 27 Oct 2021 7:20 AM GMT (Updated: 27 Oct 2021 9:26 AM GMT)

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி,  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது. இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வருந்திய அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மேலும், நவ்ஜோத் சிங் சித்து ஆபத்தானவர் என்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர் எனவும் கடுமையாக சாடினார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக டுவிட்டரில் அறிவித்து இருந்தார்.




இந்த நிலையில் கேப்டன் அமரிந்தர் சிங், தனது புதிய கட்சி தொடங்குவது குறித்து இன்று அறிவிப்பினை வெளியிட்டார். இதுதொடர்பாக சண்டிகரில் நிருபர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ நான் புதிய கட்சியை தொடங்க உள்ளேன். தேர்தல் கமிஷன் அனுமதித்த பின், சின்னத்துடன் பெயர் அறிவிக்கப்படும். இதற்காக எனது வழக்கறிஞர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சித்துவை (நவ்ஜோத் சிங் சித்து) பொறுத்த வரையில், அவர் எங்கிருந்து போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக களமிறங்குவோம். நேரம் வரும்போது 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். கூட்டணியுடன் அல்லது தனித்து போட்டியிடுவோம். மத்திய அரசின் விவசாய சட்டங்கள் தொடர்பாக, நாளை நாங்கள் எங்களுடன் சுமார் 25-30 பேரை அழைத்துச் செல்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக உள்துறை மந்திரியை சந்திக்க உள்ளோம். 

பாதுகாப்பு பிரச்னை வைத்து என்னை கேலி செய்தார்கள். நான் அடிப்படையில் ஒரு ராணுவ வீரர். 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். எனது பணிக் காலம் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து அடிப்படை விஷயங்களையும் நான் அறிவேன். நான் 9 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். ஆனால், ஒரு மாதம் அமைச்சராக இருப்பவர்கள் என்னைவிட அதிகம் தெரியும் என கூறுகிறார்கள். குழப்பமான சூழலில் பஞ்சாப் இருப்பதை யாரும் விரும்பவில்லை” என்று கூறினார். 

மேலும் சித்துவின் டுவிட்டர் பதிவு குறித்து பேசிய அமரீந்தர் சிங், “அவருக்கு (நவ்ஜோத் சிங் சித்து) எதுவும் தெரியாது, அதிகம் பேசுகிறார். மூளை இல்லை. இது தொடர்பாக அமித் ஷாவிடமோ அல்லது திண்டாஷாவிடமோ நான் பேசியதில்லை, ஆனால் நான் காங்கிரஸை எதிர்த்துப் போராட வலிமையாக இருக்க விரும்புகிறேன். காங்கிரஸை முறியடிக்க ஒற்றுமையாக களமிறங்குவோம்” என்று அவர் கூறினார். 


Next Story