குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை இறுதியானது விரைவில் அறிமுகம்


குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை இறுதியானது விரைவில் அறிமுகம்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:51 AM GMT (Updated: 27 Oct 2021 11:25 AM GMT)

ஜைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும்.

புதுடெல்லி,

இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு  அனுமதி வழங்கி உள்ளது.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா  நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி விலை முடிவு செய்யப்பட்டு விட்டதால் 12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான தடுப்பூசி திட்டம் மிக விரைவில் துவங்கும் என சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் ஏற்கனவே வழங்கி உள்ளதால் அதன் உற்பத்தி ஏற்கனவே துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியின் விலை, அதன் தயாரிப்பாளர்கள் கேட்ட விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை விட விலை அதிகம் எனவும் மன்சுக் மாண்டவியா கூறினார்.

ஜைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும். 

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். புற்றுநோய், சுவாசம், நரம்பியல், வாத நோய், இதயம், கல்லீரல், இரைப்பை குடல், பிறப்புறுப்பு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள்  உள்ள குழந்தைகள் முதல் முன்னுரிமை குழுவாக இருப்பார்கள். இதுவே இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாக இருக்கும்.

Next Story