நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை...! சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை...! சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Oct 2021 6:56 AM GMT (Updated: 28 Oct 2021 8:47 AM GMT)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை ஐகோர்ட்டின் உத்தரவு நீக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு  நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு தொடர்பாக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெற்ற மையம் ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடை தாள் (OMR sheet) மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கும் சேர்த்து தான், நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்த சூழலில் இந்த அறிவிப்பால், நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் என்டிஏ (NTA) தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்ற மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளது.

Next Story