அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத்சிங் உறுதி


அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத்சிங் உறுதி
x
தினத்தந்தி 29 Oct 2021 12:34 AM GMT (Updated: 29 Oct 2021 12:34 AM GMT)

இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. தேவை ஏற்பட்டால், எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

சண்டிகார்,

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று முன்தினம் ராணுவ உயரதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றார். சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைகளில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள முனைய பாலிஸ்டிக் ஆராய்ச்சி கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அதில் அவர் பேசுகையில், ராணுவ உயரதிகாரிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள நாடுகள், அவற்றின் உறவுகள், வர்த்தகம், அரசியல், பாதுகாப்பு விவகாரம் ஆகியவை எப்படி மாறி வருகிறது என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடுதான். முதலில் மோதலை தொடங்குவது அதன் பண்புக்கு எதிரானது. ஆனால், தேவை ஏற்பட்டால், எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஒருமுறை சொன்னார். ‘‘உலகத்தில் அச்சத்துக்கே இடமில்லை. ஒரு வலிமையான நாட்டைத்தான் மற்றொரு வலிமையான நாடு மதிக்கும்’’ என்று.

அதுபோல், எந்த நாட்டுடனும் கண்ணோடு கண் பார்த்து பேசும் அளவுக்கு இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story