சட்டசபை தேர்தல்; மம்தா பானர்ஜி இன்று கோவா பயணம்


சட்டசபை தேர்தல்; மம்தா பானர்ஜி இன்று கோவா பயணம்
x
தினத்தந்தி 29 Oct 2021 4:10 AM GMT (Updated: 29 Oct 2021 4:10 AM GMT)

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோவாவிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.



கொல்கத்தா,

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் மீனவ சமூக மக்களை சந்தித்து பேச இருக்கிறார்.  இதன்படி, முதலில் டோனா பவுலா பகுதியில் உள்ள சர்வதேச மையத்தில் இன்று காலை 10 மணியளவில் கோவா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாக மதியம் 12 மணியளவில் பெடிம் பகுதியில் மீனவ மக்களுடன் அவர் உரையாடுகிறார்.  இதன்பின்பு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார்.


Next Story