முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 3 Nov 2021 7:24 PM GMT (Updated: 3 Nov 2021 7:24 PM GMT)

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கரன் சார்பில் வக்கீல் ஜெய சுகின் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சம் தேவையற்ற வகையில் உருவாக்கப்படுகிறது.இந்த அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளுக்கு இடையூறில்லாத அனுமதியை கேரள போலீஸ் அளிப்பதில்லை. ஆனால் சமூக விரோதிகளுக்கும், அணைக்கு எதிராக போராடுபவர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது.போதுமான காரணங்களின்றி, புதிய அணையை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்த கோரிக்கைக்கு ஆதரவான போராட்டங்களில் கேரள அரசியல் கட்சிகளும் பங்கேற்று வருகின்றன.முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போதுமான போலீசாரை கேரள அரசு ஈடுபடுத்தவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அம்மாநில போலீஸ் எடுக்கவில்லை.

எனவே முல்லைப் பெரியாறு அணைக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றை ஈடுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story