கொச்சின் சர்வதேச விமான நிலைய நீர்மின் திட்டம்: பினராயி விஜயன் திறந்து வைத்தார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Nov 2021 9:02 PM GMT (Updated: 6 Nov 2021 9:02 PM GMT)

கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நீர்மின் திட்டத்தை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

கொச்சி,

கொச்சி சர்வதேச விமான நிலையம், அரிப்பாறா பகுதியில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள உள்ளது. கேரளா சிறு நீர்மின்சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கேரள மின்வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு விடப்பட்டுள்ளது.  

உலகின் முதல் சோலார் மின்சக்தி விமான நிலையமான கொச்சி சர்வதேச விமான நிலையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மின் நிலையம் தற்போது மின் உற்பத்தியை தொடங்க உள்ளது. 4.5 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள இந்த நீர்மின் நிலையம் கோழிக்கோடு அருகே உள்ள அரிப்பாறா பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் ஓடும் இருவழிஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் நீர்மின் நிலைய கட்டுமான அமைப்பும் கட்டப்பட்டுள்ளன. அதன் மூலம் மின்சார உற்பத்தி பணிகள் நடைபெற உள்ளது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், கேரள மின் வாரியத்திற்கு(கே.எஸ்.இ.பி)  அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில்,  அக்டோபர் மாதம் முதல் சோதனை பணிகள்  நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மதிப்பாக ரூபாய் 52 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம், அரிப்பாறா பகுதியில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகளை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நீர்மின் நிலையம் ஆண்டுக்கு 14 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Next Story