பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது


பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Nov 2021 12:55 AM GMT (Updated: 7 Nov 2021 12:55 AM GMT)

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர்த்து பிற மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.

எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களின் கட்சித்தலைமை ஏற்கனவே தொடங்கி இருக்கிறது.

அதேநேரம் கட்சியின் தேசிய தலைமையும் இந்த மாநில தேர்தல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள் மற்றும் 124 செயற்குழு உறுப்பினர்கள் என பலர் நேரில் பங்கேற்கிறார்கள்.

அதேநேரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், சில செயற்குழு உறுப்பினர்களும் காணொலி காட்சி மூலமும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா தொடக்க உரையாற்றுகிறார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பல தலைவர்களும் சிறப்புரையாற்ற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா பரவலுக்குப்பின் முதன் முதலில் நடைபெறும் கட்சியின் இந்த உயர்மட்ட கூட்டத்தில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக 5 மாநில சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த 29 சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் வளாகத்தில் மத்திய அரசின் ஏழை நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெறுகிறது. குறிப்பாக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

Next Story