சட்டப்படி மேகதாதுவில் அணை கட்டுவோம்: மந்திரி ஈசுவரப்பா திட்டவட்டம்


சட்டப்படி மேகதாதுவில் அணை கட்டுவோம்: மந்திரி ஈசுவரப்பா திட்டவட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2021 8:45 PM GMT (Updated: 8 Nov 2021 8:45 PM GMT)

சட்டப்படி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக மந்திரி ஈசுவரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

பெங்களூரு, 

மேகதாது விவகாரத்தில் அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் பாத யாத்திரை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், சட்டப்படி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றும் மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

கர்நாடக மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தி பாதயாத்திரை நடத்துவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறியுள்ளதா?. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் நடத்த திட்டமிட்டுள்ளது. அவர்கள் பாதயாத்திரை நடத்தட்டும். அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நீர் விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.

இந்த மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது கன்னடர்கள் ஒவ்வொருவரின் விருப்பமாகும். சட்டப்படி மேகதாதுவில் அணை கட்டுவோம். இதை நாங்கள் செய்தே தீருவோம். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் குறித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். வார்டு மறுவரையறை குறித்து அந்த குழு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

நளின்குமார் கட்டீல் தலைமையில் பா.ஜனதா பல்வேறு இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் கட்சியின் மாநில தலைவர் பதவியில் அவரே நீடிக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலை அவரது தலைமையிலேயே எதிர்கொள்வோம். பிட்காயின் மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் உண்மைகள் வெளிவரும்.

இந்த விஷயத்தில் அரசு மீது காங்கிரசார் அடிக்கடி குற்றம்சாட்டுவது சரியல்ல. எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியை பலப்படுத்த அவ்வப்போது கர்நாடகத்திற்கு வருகிறார். அதனால் அவர் வருவதில் எந்த சிறப்பும் இல்லை என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

Next Story