பாகிஸ்தான் பாதுகாப்பு படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொலை: மத்திய அரசு கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Nov 2021 10:31 PM GMT (Updated: 8 Nov 2021 10:31 PM GMT)

நடுக்கடலில் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாக். தூதரக அதிகாரியை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

போர்பந்தர், 

மராட்டியம், டையூ உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 6-ந்தேதி குஜராத் அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 2 படகுகளில் அங்கு வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு படையினர், இந்திய மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் மராட்டிய மீனவர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். டையூ பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவர் காயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. 

இதற்கிடையே மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 வீரர்கள் மீது குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்துக்கு உட்பட்ட நவி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். காயமடைந்த மீனவர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Next Story