"நாளை ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்" தேவேந்திர பட்னாவிசுக்கு மராட்டிய மந்திரி எச்சரிக்கை


நாளை ஹைட்ரஜன் குண்டு வீசுவேன் தேவேந்திர பட்னாவிசுக்கு மராட்டிய மந்திரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2021 12:37 PM GMT (Updated: 9 Nov 2021 12:37 PM GMT)

மராட்டிய மந்திரி நவாப் மாலிக் நாளை ஹைட்ரஜன் வெடிகுண்டு வீசுவேன் என்று தேவேந்திர பட்னாவிஸை எச்சரித்துள்ளார்.

மும்பை

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் 26 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவரான சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். 

இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை சுற்றி பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், போதைப்பொருள் விவகாரம் குறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிசும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. 

நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனான தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என்று கூறிய  தேவேந்திர பட்னாவிஸ் இன்று  நவாப் மாலிக்கிற்கு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது. 

1993 மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிழல் உலக நபர் ஒருவருடன் நவாப் மாலிக் சொத்து பேரம் நடத்தி உள்ளார் என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துள்ள மராட்டிய மந்திரி நவாப் மாலிக் நாளை ஹைட்ரஜன் வெடிகுண்டு வீசுவேன் என்று தேவேந்திர பட்னாவிஸை எச்சரித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தேவேந்திர பட்னாவிஸ் தொடர்பாக நாளை ஹைட்ரஜன் குண்டை வீசுவேன். தேவேந்திர பட்னாவிஸின் நிழல்  உலக தொடர்புகளை அம்பலப்படுத்துவேன். தேவேந்திர பட்னாவிஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மற்றும்  நிழல் உலகத்துடன் என்னை இணைத்து எனது  புகழை கெடுக்க முயற்சிக்கிறார். அவருக்கு நான் சட்டப்படி நான்  நோட்டீஸ் அனுப்புவேன் என கூறினார்.

Next Story