மாசுபட்ட காற்றின் தரம் உயர்த்த டெல்லியில் ஒரு வாரம் கட்டுமான பணிகளுக்கு தடை: கெஜ்ரிவால்


மாசுபட்ட காற்றின் தரம் உயர்த்த டெல்லியில் ஒரு வாரம் கட்டுமான பணிகளுக்கு தடை: கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 13 Nov 2021 8:22 PM GMT (Updated: 13 Nov 2021 8:22 PM GMT)

டெல்லியில் மாசுபட்ட காற்றின் தரத்தை உயர்த்த முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அங்கு 1 வாரம் பள்ளிகள் மூடப்படுகின்றன. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றுமாசு

டெல்லியில் அதன் அண்டை மாநிலங்களில் வயல்களில் எரிக்கப்படுகிற விவசாய கழிவுகளால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தலைநகர் டெல்லிக்கு மூச்சு முட்டுகிறது. அது, காற்று மாசு தலைநகராக மாறி வருகிறதோ என்று சந்தேகிக்கிற நிலை வந்து இருக்கிறது.

இதற்கிடையே அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் வயல் கழிவுகளை அகற்றுவதற்கு எந்திரங்களை வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் போட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, “டெல்லியின் சுற்றுச்சூழல் மிக மோசமாகி விட்டது. மக்கள் வீடுகளில் கூட முக கவசம் அணிகிற நிலை உள்ளது. டெல்லியின் காற்றின் தரத்தை உயர்த்த வாகன போக்க்உவரத்தை நிறுத்தவும், 2 நாட்கள் லாக்டவுன் (பொதுமுடக்கம்) கொண்டு வரவும் பரிசீலியுங்கள்” என்று மத்திய, மாநில அரசுகளிடம் யோசனை தெரிவித்தது.

கெஜ்ரிவால் அதிரடி

இதையடுத்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், டெல்லயில் மாசு அதிகரிப்பை கையாள்வது குறித்து அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின், சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதையடுத்து முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி முடிவுகளை எடுத்து நிருபர்களிடம் அறிவித்தார். அது வருமாறு:-

* காற்றுமாசு மோசமாகி இருப்பதை கருத்தில் கொண்டு டெல்லியில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலம் பள்ளிக்கூடங்கள் மூடப்படும்.

* அரசு ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம்.

* 14-ந்தேதி முதல் (இன்று முதல்) 17-ந்தேதி வரை கட்டுமான பணிகள் தடை செய்யப்படுகின்றன.

* லாக் டவுன் (பொதுமுடக்கம்) குறித்து அரசு ஒரு திட்டம் தீட்டி அதை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கும்.

இவ்வாறு கெஜ்ரிவால் அறிவித்தார்.


Next Story