கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் - ஜனாதிபதிக்கு மகளிர் ஆணையம் கடிதம்


கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் - ஜனாதிபதிக்கு மகளிர் ஆணையம் கடிதம்
x
தினத்தந்தி 14 Nov 2021 11:39 AM GMT (Updated: 14 Nov 2021 11:39 AM GMT)

கங்கனா ரணாவத்துக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

புதுடெல்லி,

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்  என  ‘டெல்லி மகளிர் ஆணையத்தின்’ தலைவர் ஸ்வாதி மாலிவால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியா சுதந்திரம் அடைந்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த கங்கனா  ரணாவத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் பலமாக எழும்பி வருகின்றன. இந்நிலையில், அவருடைய இத்தகைய சர்ச்சை கருத்துக்களின் மூலம், நம் நாட்டின் மாபெரும் சுதந்திர போராட்ட வீரர்களாகிய மகாத்மா காந்தி, பகத் சிங் மற்றும் எண்ணில் அடங்கா பல்வேறு போராட்ட வீரர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்ட வெறுப்புணர்வு வெளிகாட்டப்பட்டுள்ளது.

நம் முன்னோர்களின் உயிர்த் தியாகத்தால் தான் நமது தேசம் சுதந்திரம் அடைந்தது என்பதை நாம்  எல்லோரும் நன்கு அறிவோம்.அவருடைய கருத்துக்கள் நாட்டு மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.மேலும், தேசத்துக்கு எதிராகவும்  உள்ளன.

அவருக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள்.”

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரணாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி’ என்று பேசியிருந்தார். 

அவருடைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் கடுமையாக எழுந்துவருகின்றன. மேலும், கங்கனா ரணாவத்திற்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. 

Next Story