காற்று மாசு: 6 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?- கெஜ்ரிவாலுக்கு கம்பீர் கேள்வி


காற்று மாசு:  6 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?- கெஜ்ரிவாலுக்கு கம்பீர் கேள்வி
x
தினத்தந்தி 15 Nov 2021 9:42 AM GMT (Updated: 15 Nov 2021 9:42 AM GMT)

டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை என கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஊரடங்கில் கட்டுப்பட்டு இருந்த காற்று மாசு தளர்வுகளுக்கு பின் மெல்ல அதிகரிக்க தொடங்கியது.  கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு கடந்த சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும்  வந்த போது, டெல்லி அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை  டெல்லி எம்.பி கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசைக் குறைக்க கெஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊரடங்குதான் காற்று மாசைக் குறைக்கத் தீர்வு என்றால், அதை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை.  சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பின்புதான் செய்ய வேண்டுமா?

டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை. பிறகு எப்படி பொதுமக்கள் தங்கள் கார்களை விட்டு விட்டு பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என கெஜ்ரிவால் அரசு எப்படி எதிர்பார்க்கலாம். யமுனையைச் சுத்தப்படுத்தக் கூட  உங்களால் முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Next Story