இந்தியா வரும் 99 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு


இந்தியா வரும் 99 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு
x
தினத்தந்தி 15 Nov 2021 1:12 PM GMT (Updated: 15 Nov 2021 1:12 PM GMT)

99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது. மேலும், நாட்டின் எல்லைகளையும் அடைத்தது. 

அதன் பின்னர் கொரோனா பரவல் மெல்ல குறையத்தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. 

இந்தியா வருபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தற்போது, வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 

குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் உள்பட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயத்தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அதேவேளை, இந்த 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை தங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story