கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் மீண்டும் திறப்பு- மத்திய அரசு


கர்தார்பூர் வழித்தடம்  நாளை முதல்  மீண்டும் திறப்பு- மத்திய அரசு
x
தினத்தந்தி 16 Nov 2021 9:44 AM GMT (Updated: 16 Nov 2021 10:28 AM GMT)

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.

புதுடெல்லி,

கர்தார்பூர் வழித்தடத்தை நாளை முதல் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. 

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசி காலத்தில் அப்பகுதியில்தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படு கிறது. அவரது நினைவாக ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ ஸ்ரீ குருநானக் தேவ் ஜி  மற்றும் சீக்கிய மதம் மீது  பிரதமர் மோடி கொண்டுள்ள அபரிமிதமான மரியாதையை இந்த முடிவு காட்டுகிறது” எனத்தெரிவித்துள்ளார். 


Next Story