5 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்த நர்சு தனது பிரசவத்தில் உயிரிழப்பு


5 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்த நர்சு தனது பிரசவத்தில் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Nov 2021 10:29 AM GMT (Updated: 16 Nov 2021 10:29 AM GMT)

5 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்த நர்சு தனது பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஹிங்கொலி மாவட்ட அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஜோதி கவ்லி (38). இவர் பிரசவப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் 5 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். 

இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜோதி கவ்லி மீண்டும் கற்பமாகியுள்ளார். நிரைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் விடுமுறை எடுக்காமல் அவர் தொடர்ந்து தனது பணியை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 1-ம் தேதி வரை பணிக்கு வந்து பிரசவம் பார்த்துள்ளார்.   

இவருக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான் வேலை செய்யும் அதே மருத்துவமனையிலேயே ஜோதி கவ்லி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை நலமுடன் உள்ளது. 

அதேவேளை, பிரவசத்திற்கு பின்னர் ஜோதி கவ்லிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால், ஜோதி கவ்லியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததையடுத்து அவர் நண்டீட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ஜோதி கவ்லிக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சு ஜோதி கவ்லி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்த பெண் நர்சு ஜோதி கவ்லி தனது பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story