டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்றின் தரம் மிகவும் மோசம்!


டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்றின் தரம் மிகவும் மோசம்!
x
தினத்தந்தி 17 Nov 2021 12:32 PM GMT (Updated: 17 Nov 2021 12:32 PM GMT)

தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது.

மும்பை,

தலைநகர் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசு எதிரொலியால் டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது. அளவில்லாத கட்டுமான பணிகள் மற்றும் மாநகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.மும்பையின் பல இடங்களில் டெல்லியை விட, காற்று தர குறியீடு மோசமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையின் கொலாபா பகுதியில்  காற்று தர குறியீடு எண் 345ஆக உள்ளது. இது டெல்லியை விட அதிகம். மேலும், தெற்கு மும்பை பகுதியில்  காற்று தர குறியீடு எண் 300க்கும் மேல் பதிவாகி உள்ளது.

ஐ.ஐ.டி மும்பையின் ஆய்வின் படி, மும்பையின் முக்கிய பகுதிகளான நரிமான் பாயிண்ட், மாஸ்கான் வளாகம், கர்லா வளாகம் போன்ற இடங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் தடம் கட்டுமானம், எண்ணெய் மற்றும் வாயு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் மாசு உள்ளிட்டவையும் காற்று மாசு அடைவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

Next Story