அமேசான் மூலம் 'இனிப்பு துளசி இலைகள்’ என கஞ்சா விற்பனை! திடுக்கிடும் தகவல்!


அமேசான் மூலம் இனிப்பு துளசி இலைகள்’ என கஞ்சா விற்பனை! திடுக்கிடும் தகவல்!
x
தினத்தந்தி 18 Nov 2021 4:24 PM GMT (Updated: 18 Nov 2021 4:49 PM GMT)

ஆமதாபாத் நகரத்தை மையமாக கொண்ட ஒரு நிறுவனம், கஞ்சா இலைகளை இனிப்பு துளசி இலைகள் என்று காண்பித்து விற்பனை செய்துள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தின் பிண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கஞ்சா இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசியத்தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த உணவகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் உணவகத்தில் 20 கிலோ எடை அளவிலான கஞ்சா இலைகளை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சா இலைகளை கைப்பற்றிய போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கஞ்சா இலைகள் கடத்தல் கும்பல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து அமேசான் வணிக தளத்தை பயன்படுத்தி கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் கும்பல் கஞ்சா இலைகளை அமேசான் ஆன்லைனில் இனிப்பு துளசி இலை என்ற பெயரில் விற்பனை செய்து வந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் அமேசான் விற்பனை தளம் மூலம் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா இலைகளை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த விற்பனை நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அமேசான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்தியபிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா இன்று கூறியுள்ளதாவது,

“ஆன்லைன் வணிகத்திற்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஆனால், மத்தியபிரதேசத்தில் வகுக்கப்படும். அமேசான் நிறுவன அதிகாரிகளை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

ஆனால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியும் இதுவரை அமேசான் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்று பிண்ட் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story