நவம்பர் 29 நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி: இன்னும் பின்வாங்கவில்லை - விவசாயிகள் சங்கம்


நவம்பர் 29 நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி: இன்னும் பின்வாங்கவில்லை - விவசாயிகள் சங்கம்
x
தினத்தந்தி 20 Nov 2021 10:33 AM GMT (Updated: 20 Nov 2021 10:33 AM GMT)

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் வரும் போராட்டம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. நவம்பர் 29ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரின் போது 500 விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்துவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று  வெளியிட்ட அறிவிப்பில் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நிறுத்தப்படும் என்று கருதப்பட்ட நிலையில், ஏற்கனவே முன்மொழியப்பட்ட  டிராக்டரில் நாடாளுமன்றத்துக்கு வரும் போராட்டம் இன்னும் பின்வாங்கப்படவில்லை என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேளாண் சட்டங்கள் சட்டரீதியாக பின்வாங்கப்பட்ட பின்னர் தான் போராட்டம் முழுவதுமாக கைவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில், பெரும் கலவரம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கப்பட்ட  விவசாயிகள் போராட்டத்தில்  பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் உள்ள விவசாயிகளால் போராட்டம்   நடத்தப்பட்டு வருகிறது.

Next Story