போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் ஏன்? மும்பை ஐகோர்ட்


போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் ஏன்?  மும்பை ஐகோர்ட்
x
தினத்தந்தி 20 Nov 2021 12:25 PM GMT (Updated: 20 Nov 2021 12:25 PM GMT)

ஆர்யன் கானுக்கு மும்பை ஐகோர்ட் வழங்கிய ஜாமீன் உத்தரவின் விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு, சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் கடந்த மாத இறுதியில் மும்பை ஐகோர்ட்டு  ஜாமீன் வழங்கியது. 

இந்த நிலையில், மும்பை ஐகோர்ட் வழங்கிய ஜாமீன் உத்தரவின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் ஏன் வழங்கப்பட்டது என்ற விவரம் இடம் பெற்றுள்ளது. மும்பை ஐகோர்ட்டின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-  

போதைப் பொருளை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  தொழிலதிபர் அர்பாசுக்கும், ஆர்யன் கானுக்கும் இடையே வாட்ஸ்அப் உரையாடல்களில் சந்தேகத்திற்கு இடமான தகவல் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்கான மட்டும் ஆர்யன் கானை போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்புப் படுத்த முடியாது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story