விவாகரத்துக்கு பிறகும் குழந்தையை தந்தை சந்திக்கலாம்: கர்நாடக ஐகோர்ட்டு


விவாகரத்துக்கு பிறகும் குழந்தையை தந்தை சந்திக்கலாம்: கர்நாடக ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 20 Nov 2021 8:09 PM GMT (Updated: 20 Nov 2021 8:09 PM GMT)

விவாகரத்துக்கு பிறகும் குழந்தையை தந்தை சந்திக்கலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டில் மனு

தமிழ்நாடு சென்னையில் வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனக்கும் எனது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். அவன் மனைவியின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறான்.

விவாகரத்துக்கு பின்னர் நான் சென்னையில் குடிபெயர்ந்து வசித்து வருகிறேன். நான் எனது மகனை சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் என் மகனை சந்திக்க விடாமல் எனது மனைவி தடுக்கிறார். இதனால் என் மகனை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பெற்றோருக்கு அறிவுரை கூறும் திறன்

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனைவியின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுவன் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான். தேர்வு தொடங்க இருப்பதால், தந்தையை சந்திக்க அனுமதித்தால் படிப்பு பாதிக்கும். இதனால் தந்தையை சந்திக்க அனுமதிக்கவில்லை’ என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிபதி பி.வீரப்பா கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். பெற்றோருக்கு அறிவுரை கூறும் திறன் குழந்தைகளுக்கு உள்ளது. உங்களின் அச்சங்களுக்கு இங்கு இடமில்லை. மகனை சந்திக்க மனுதாரருக்கு எந்த தடையும் இல்லை. அவர் தனது மகனை சந்திக்கலாம். தாயிடம் வளரும் மகனை தந்தை சந்திக்க அனுமதிக்க வேண்டும். கோடை விடுமுறையில் பாதி நாட்களை தந்தையுடன் சிறுவன் செலவிடலாம்’ என்று உத்தரவிட்டார்.

குழந்தைகளை தந்தை சந்திக்கலாம்

மேலும் நீதிபதி கூறுகையில், ‘பெற்றோர்கள் விவாகரத்து செய்தாலும் குழந்தை இருவருக்கும் தான் பிறந்துள்ளது. அப்படி இருக்கும்போது தாயிடம் வளரும் குழந்தையை தந்தை சந்திக்க விடாமல் தடுப்பது நியாயம் இல்லை. குழந்தையை தந்தை சந்திக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள். விவாகரத்து பெற்ற பிறகும் குழந்தையை தந்தை சந்திக்கலாம். இதில் எந்த தடையும் இல்லை’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, தந்தை சந்திப்பது குறித்து சிறுவனின் கருத்தையும் கேட்க வேண்டி உள்ளது. இதனால் வருகிற 24-ந்தேதி சிறுவனை கோர்ட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story