பா.ஜனதா தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்து வேளாண் சட்டங்கள் வாபஸ்: சிவசேனா


பா.ஜனதா தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்து வேளாண் சட்டங்கள் வாபஸ்: சிவசேனா
x
தினத்தந்தி 20 Nov 2021 8:40 PM GMT (Updated: 20 Nov 2021 8:40 PM GMT)

உத்தரபிரதேசம், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்து வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்ப பெற்றுள்ளது என சிவசேனா கூறியுள்ளது.

இரங்கல் கூட தெரிவிக்காத மோடி

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேளாண் சீர்திருத்தம் என்ற பெயரில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறுவதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து சிவசேனா சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்தது. போராட்ட களங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தின் போது, விவசாயிகள் காலிஸ்தானியர்கள், பாகிஸ்தானை சோ்ந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். எனினும் தனியார் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.

போராட்டத்தின் போது சுமார் 550 விவசாயிகள் உயிரிழந்தனர். லக்கிம்புர் கேரியில் மத்திய மந்திரியின் மகன் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றார். அந்த மரணங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

தேர்தல் தோல்வி பயம்

தற்போது விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வராது, உத்தரபிரதேசம், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்து மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்பபெற்று உள்ளது. இதுவிவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. ஆணவ அதிகாரத்தின் தோல்வி.

மேலும் சமீபத்தில் 13 மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் தோல்வி பா.ஜனதாவுக்கு இந்த ஞானயோதயத்தை தந்து உள்ளது. ஆணவம் அழிக்கப்படும் என்பதை மகாபாரதமும், பகவத்கீதையும் நமக்கு கற்பித்து உள்ளது. ஆனால் போலி இந்துத்வாவாதிகள் இதை மறுந்து விட்டனர். அவர்கள் ராவணன் போல உண்மை மற்றும் நீதியின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். வருங்காலங்களிலாவது மத்திய அரசு ஆவணப்போக்குடன் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவரக்கூடாது. நாட்டின் நலன்கருதி அவர்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story