சிஏஏ-வை திரும்பப்பெறவில்லை என்றால் உ.பி. தெருக்களை ‘ஷாகின் பாக்’ களமாக மாற்றுவோம் - ஓவைசி


சிஏஏ-வை திரும்பப்பெறவில்லை என்றால் உ.பி. தெருக்களை ‘ஷாகின் பாக்’ களமாக மாற்றுவோம் - ஓவைசி
x
தினத்தந்தி 22 Nov 2021 3:39 AM GMT (Updated: 22 Nov 2021 3:39 AM GMT)

சிஏஏ சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் உத்தரபிரதேசத்தில் உள்ள தெருக்கள் ‘ஷாகின் பாக்’ போராட்டக்களமாக மாற்றுவோம் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.  

இதற்கிடையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சியும் உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் என்று அகட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பாராபன்கி பகுதியில் எ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஓவைசி பேசியதாவது, குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இந்த சட்டத்தை பாஜக அரசு திரும்பப்பெறவில்லையென்றால் நாங்கள் தெருக்களில் வந்து போராடுவோம். இங்கு (உத்தரபிரதேசம்) மற்றொரு ’ஷாகின் பாக்’ களம் உருவாகும்’ என்றார்.

குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை எதிர்த்து 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லியில் உள்ள ஷாகின் பாக் என்ற இடத்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story