தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு : மத்திய குழு ஆய்வில் வேளாண் இயக்குனர் விரட்டியடிப்பு + "||" + Puducherry riots: Excommunication of the Director of Agriculture in the Central Committee Study

புதுச்சேரியில் பரபரப்பு : மத்திய குழு ஆய்வில் வேளாண் இயக்குனர் விரட்டியடிப்பு

புதுச்சேரியில் பரபரப்பு : மத்திய குழு ஆய்வில் வேளாண் இயக்குனர் விரட்டியடிப்பு
புதுச்சேரி மணவெளி ஆர்.கே. நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரிடம் அப்பகுதி மக்கள் குறைகளை தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, பாகூர் பகுதியில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் மூழ்கடித்து வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவைகள் பலத்த சேதமடைந்தன.

பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.பாகூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

அப்போது, பாகூர் பகுதி விவசாயிகள், மத்திய குழுவினரிடம் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை, மானியமும் வழங்கப்படவில்லை.

வடிகால் வாய்க்கால்களை உரிய காலத்திற்கு முன்னதாக தூர்வாரவில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

அப்போது, வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றார். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், மழை வெள்ளத்தால் தத்தளித்த போது, எந்த அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் எங்களை பார்க்கவில்லை. இப்போது, மத்திய குழுவினருடன் வந்து நாடகம் நடத்த வந்துள்ளீர்களா? என கேட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலகாந்தியை, சட்டையை பிடித்து தள்ளி விரட்டியடித்தனர்.

சுதாரித்து கொண்ட இயக்குனர் பாலகாந்தி அருகில் இருந்த காரின் மீது சாய்ந்து சேற்றில் விழாமல் தப்பினார். இதனால், அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளோடை துணை மின் நிலையத்தை பார்வையிட்டு சென்றனர்.

ஆய்வின்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் பூர்வா கார்க், சப்- கலெக்டர் ரிஷிதா குப்தா, தாசில்தார் குப்பன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணி மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து புதுவை பிள்ளைச்சாவடி கடற்கரையோரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

மணவெளி ஆர்.கே. நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரிடம் அப்பகுதி மக்கள் குறைகளை தெரிவித்தனர்.