திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார், காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத்..!!


திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார், காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத்..!!
x
தினத்தந்தி 23 Nov 2021 10:54 PM GMT (Updated: 23 Nov 2021 10:54 PM GMT)

காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத், திரிணாமுல் காங்கிரசில் நேற்று தன்னை இணைத்துக்கொண்டார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் பா.ஜ.க.வில் இருந்து வந்த கீர்த்தி ஆசாத், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக அப்போதைய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை வெளிப்படையாக விமர்சித்ததால், 2015-ம் ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் 2018-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

இந்த நிலையில் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் முன்னிலையில் கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இணைந்தார்.

அதே போல் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான பவன் வர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அசோக் தன்வாரும் நேற்று மம்தா பானர்ஜியின் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். 

Next Story