கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல- பிரதமர் மோடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Nov 2021 8:05 AM GMT (Updated: 26 Nov 2021 8:05 AM GMT)

குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு தினம் நாடாளுமன்ற  மைய மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

 ''இன்றைய நாள் நாடாளுமன்றத்தை  வணங்க வேண்டிய நாள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நமக்கு வழங்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். 

நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. பெரும் பாரம்பரியம் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.1950க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும்.

அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்.

நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழலுக்காக தண்டனை பெறுபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. 

கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல  இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன''.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story