புதிய கொரோனா உருமாற்றம்: விமான நிலையங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்


புதிய கொரோனா உருமாற்றம்: விமான நிலையங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:28 AM GMT (Updated: 26 Nov 2021 8:28 AM GMT)

புதிய கொரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பி.1.1.529 என்று மருத்துவ நிபுணர்களால் அறியப்படும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தற்போது 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கொரோனா உருமாற்றம் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளை, குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Next Story