முதியோர் இல்லத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Nov 2021 1:47 AM GMT (Updated: 29 Nov 2021 1:47 AM GMT)

மராட்டியத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தானே, 

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவில் உள்ள சோர்கான் பகுதியில் மாதோஸ்ரீ என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் 2 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அதில், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதைத்தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள மற்ற முதியவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 109 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல முதியோர் இல்லத்தில் வேலை செய்துவரும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஊழியர்களின் உறவினர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 1½ வயது குழந்தைக்கும், கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள் ஆவர். கொரோனா தொற்றுக்கு ஆளான 55 முதியவர்களும் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story