‘நீட்’ தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


‘நீட்’ தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 30 Nov 2021 6:49 PM GMT (Updated: 30 Nov 2021 6:49 PM GMT)

நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதுடெல்லி,

‘நீட்’ தேர்வு இயற்பியல் வினாத்தாள் இந்தி மொழிபெயர்ப்பில் தவறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் பீகாரைச் சேர்ந்த வஜ்தா தபசும் உள்ளிட்ட 22 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 25-ந்தேதி விசாரித்தது.

அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘இயற்பியல் வினாத்தாள் இந்தி மொழிபெயர்ப்பில் தவறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து இந்தி மட்டுமே தெரிந்த நிபுணர், ஆங்கிலம் மட்டுமே அறிந்த நிபுணர், 2 மொழிகளும் அறிந்த நிபுணர் என 3 பேரை கொண்டு ஆய்வு செய்தோம். ஆனால் அனைவருக்கும் விடை ஒன்றாகவே கிடைத்துள்ளது.

இருப்பினும், நிபுணர்களை கொண்டு மீண்டும் ஆராயப்படும். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமையின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘நீட்’ தேர்வு இயற்பியல் வினாத்தாள் இந்தி மொழியாக்கத்தில் எவ்வித தவறும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என வாதிட்டார். இதனையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story