தமிழகம்-கேரளா இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Dec 2021 12:59 AM GMT (Updated: 1 Dec 2021 12:59 AM GMT)

தமிழகம் மற்றும் கேரளா இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கேரளா- தமிழ்நாடு இடையேயான பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகம்- கேரளா இடையே பஸ் போக்குவரத்து நடத்த கேரள அரசு சார்பில் மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், தற்போது சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி இருப்பதை தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே அரசு பஸ்களை இயக்குவது தொடர்பாக கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு தமிழக போக்குவரத்து துறை மந்திரிக்கு கடந்த மாதம் 6-ந் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று பஸ் போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக பேசிய கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு, “கேரள அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து சேவையினை மீண்டும் நடத்த தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து உள்ளார். இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் தமிழ்நாட்டிற்கு கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, வேளாங்கண்ணி, தென்காசி ஆகிய இடங்களுக்கு முதற்கட்டமாக பஸ்கள் இயக்கப்படும்”  என்று அவர் கூறினார்.

Next Story