காஷ்மீருக்கு பாஜகவை கொண்டுவராதீர்கள் என முப்தி முகமதுவிடம் கூறினேன் - உமர் அப்துல்லா


காஷ்மீருக்கு பாஜகவை கொண்டுவராதீர்கள் என முப்தி முகமதுவிடம் கூறினேன் - உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 1 Dec 2021 10:56 AM IST (Updated: 1 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சையதின் ஒற்றை தவறான முடிவு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு வழிவகுத்ததாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றின.

அத்தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் 2015-ம் ஆண்டு முப்தி முகமது சையது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பாஜகவுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தது. அந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சரகாக முப்தி முகமது சையது பொறுப்பேற்றார்.

முப்தி முகமது சையது 2016 ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து அவரது மகள் மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். ஆனால், கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு மெகபூபா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கி கொண்டது. இதனால், ஆட்சி கவிழ்ந்து காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. இதன் பின்னர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சையதின் ஒற்றை தவறான முடிவு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு வழிவகுத்ததாக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

காஷ்மீரின் தொடா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய உமர் அப்துல்லா, நமது பலவீனத்தை பாஜக பயன்படுத்திக்கொண்டது. எனக்கு அது தெரியும். 2014 தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பது குறித்து முப்தி முகமது சையதிடம் எச்சரித்தேன். 

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது ஜம்மு-காஷ்மீருக்கு ஆபத்தானது என முப்தி முகமதை நான் எச்சரித்தேன். உங்கள் முடிவால் நாம் பாதிக்கக்கூடும் என கூறினேன். நாங்கள் (தேசிய மாநாட்டு கட்சி) உங்களை ஆதரிக்கிறோம், ஆனால் காஷ்மீருக்கு பாஜகவை கொண்டுவராதீர்கள் என கூறினேன். ஆனால், அவருக்கு அந்த சமயத்தில் சில நிர்பந்தங்கள் இருந்தன.  

முப்தி முகமது சையதின் அந்த ஒற்றை தவறான முடிவால் நாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தண்டிக்கப்படப்போகிறோம் என்று தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி என்ற முப்தி முகமது சையதின் ஒற்றை தவறான முடிவு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு வழிவகுத்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் கூறப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேறவில்லை’ என்றார்.

Next Story