சாப்பாடுதான் முக்கியம்....!திருமண மண்டபமே தீ பற்றி எரியும் போது பதற்றமின்றி ருசித்த விருந்தினர்


சாப்பாடுதான் முக்கியம்....!திருமண மண்டபமே தீ பற்றி எரியும் போது பதற்றமின்றி ருசித்த விருந்தினர்
x
தினத்தந்தி 1 Dec 2021 7:18 AM GMT (Updated: 1 Dec 2021 8:34 AM GMT)

கல்யாண வீட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த போதும் விருந்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் பீம்வாடி பகுதியில் நேற்று முன்தினம் கல்யாணம் நடைபெற்றது. இந்த கல்யாணத்திற்கு பின்னர் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டு விருந்தினர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பதற்றமடைந்து தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அங்கும் இங்கும் ஓடினர்.

ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தாளிகளில் இருவர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து செல்லாமல் சர்வ சாதாரணமாக அதிலேயே அமர்ந்திருந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பறிமாறப்பட்ட கறி உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 

நிகழ்ச்சி மேடைக்கு அருகே தீ கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த போதும் அந்த விருந்தாளிகள் இருவரும் எந்த வித பதற்றமுமின்றி தங்கள் மேஜையில் வைக்கப்பட்டிருந்த உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டனர். 



தீ மளமளவென எரிந்த போதும் அந்த இருவரும் ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக்கொண்டு கறி உணவை சாப்பிட்டதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.    

Next Story