இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான் வைரஸ் - 2 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான் வைரஸ் - 2 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Dec 2021 11:15 AM GMT (Updated: 2 Dec 2021 12:29 PM GMT)

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது.

இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த ஒமைக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.

Next Story