35 வருட காதல்...! 65 வயதில் திருமணம்...! காத்திருந்து காதலியை கரம் பிடித்தார்
கர்நாடகாவில் 65 வயது முதியவர் 35 வருட காதலுக்குப்பின் காத்திருந்து காதலியின் கரம் பிடித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் 35 வருடங்களுக்கு பிறகு 65 வயது முதியவர் தான் காதலித்த பெண்ணை மணந்து கொண்ட சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகிலுள்ள ஹெப்பாலா பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா ( வயது 65) 35 வருடங்களுக்கு முன் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்த ஜெயம்மாவை காதலித்துள்ளார்.
ஆனால் சிக்கண்ணாவின் காதலை ஜெயம்மா ஏற்க மறுத்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. அவரது கணவர் அவரை விட்டு ஓடி விட, அதன் பிறகு நிராதரவான ஜெயம்மா பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டினார்.
ஜெயம்மா தன் காதலை நிராகரித்ததால், மனம் உடைந்து போன சிக்கண்ணா சொந்த ஊரை காலி செய்து வேறு இடம் சென்றுவிட்டார். திருமணமே செய்து கொள்ளாமல் தன் காதலியின் நினைவாகவே வாழ்ந்து வந்த சிக்கண்ணாவிற்கு ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை முறிந்து போன விஷயம் தெரியாது.
சமீபத்தில் ஜெயம்மாவின் நிலை குறித்து தெரிந்து கொண்ட சிக்கண்ணா தன் காதலி ஜெயம்மாவை திருமணம் செய்து கொள்ள மீண்டும் அணுகியுள்ளார். சிக்கண்ணாவின் உண்மையான அன்பை புரிந்து கொண்ட ஜெயம்மா திருமணத்துக்கு சம்மதித்தார்.
இந்த நிலையில், மேலுகோட்டே கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிக்கண்ணா ஜெயம்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story