சிறுமிகளுக்கு தடுப்பூசிக்கு பதிலாக கொரோனா தடுப்பூசி...! சர்ச்சை சம்பவம்
கேரளாவில் சிறுமிகளுக்கு தடுப்பூசிக்கு பதிலாக தவறுதலாக கொரோனா தடுப்பூசி போட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் இந்த பாதிப்புகள் நாட்டில் உச்சம் எட்ட தொடங்கின.
ஒரு கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 லட்சம் என்ற அளவில் பதிவாகி அச்சம் ஏற்படுத்தியது. இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. இதன்பின் நாட்டில் பாதிப்புகள் குறைய தொடங்கின.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கின. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என தொடங்கி, இணை நோய் கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் என தடுப்பூசி பணிகள் தொடர்ந்தன.
இதன்பின்னர், 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு அனுமதி அளித்தது. எனினும், சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் சிறுமிகளுக்கு தடுப்பூசிக்கு பதிலாக கொரோனா தடுப்பூசி போட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் ஆர்யநாடு கிராம பகுதியில் சமூக சுகாதார மையம் ஒன்று உள்ளது.
இந்த மையத்திற்கு தடுப்பூசி போட்டு கொள்வதற்காக 15 வயதுடைய இரண்டு மாணவிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதுபற்றி மாணவிகளின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது என மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story