புயல் எதிரொலி: ஒடிசாவில் 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Dec 2021 11:59 PM IST (Updated: 4 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவனேஸ்வர்,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியிருந்தது.


இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் ஜாவத் புயல் உருவானதாகவும் இது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும் டிசம்பர் 5 ஆம் தேதி வடக்கு ஆந்திரா- ஒடிசா இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புயல்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புயல் பாதிப்புக்கு ஆளாகும் 19 கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புயலை எதிர்கொள்ளும் வகையில் கஞ்சம், கஜபதி, பூரி, கோர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, ஜாஜ்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் கடுமையான சேதங்களை எதிர்கொள்ளும் மாவட்டங்களுக்கு அனுப்ப கூடுதல் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

Next Story