ஒமைக்ரானை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - கொரோனா பணிக்குழு விளக்கம்
ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பது குறித்து மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர் விரிவாக கூறியுள்ளார்.
மும்பை,
தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. இந்தநிலையில் ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள செய்ய வேண்டியது குறித்து மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் டாக்டர் வசந்த் நாக்வேகர் கூறியதாவது:-
ஒமைக்ரான் குறித்து நாம் பீதி அடைய வேண்டிய தேவையில்லை. எனினும் அதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். கண்காணிப்பு தான் தற்போது நமக்கு தேவை. ஒமைக்ரான் வைரசில் 50 மாறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுதான் கவலைக்குரியதாக உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க கூடியதாககூட இருக்கலாம். எனினும் ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை.
தென் ஆப்ரிக்காவில் இருந்து தற்போது வந்த தகவலின்படி அந்த வைரஸ் இளம் வயதினரை அதிகம் தாக்கி உள்ளதும், லேசான பாதிப்பையும் ஏற்படுத்தி இருப்பது தான் தெரியவந்து உள்ளது. ஒமைக்ரானுக்கு எதிராக கண்காணிப்பு அவசியம். நாட்டின் எல்லை கண்காணிப்பு, மரபணு சோதனை, தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவுவதை முககவசம் 53 சதவீதம் தடுப்பதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன. பூஸ்டர் தடுப்பூசி வேலை செய்தாலும் அது தற்காலிகம் தான். ஒவ்வொரு புதுவகை வைரசுக்கும் 6 மாதத்திற்கு ஒரு முறை பூஸ்டர் டோஸ் போட முடியாது. எனவே முககவசம் அணிவது அவசியமானதாகும். தடுப்பூசிக்கும் மாற்று கிடையாது.
கட்டுப்பாடுகள் தவிர தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, தனிமைப்படுத்தல், தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதும் முக்கியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story