ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு ராஜேஷ் பூஷன் கடிதம்


ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு ராஜேஷ் பூஷன் கடிதம்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:23 AM IST (Updated: 4 Dec 2021 10:23 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாநிலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளை விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சர்வதேச பயணிகளுக்கு வழங்கியிருக்கும் வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்களில் சோதனைகள் நடைபெற வேண்டும் என்றும், ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மையை கொண்டது என்பதால், பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story