இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 9:38 AM GMT (Updated: 4 Dec 2021 9:38 AM GMT)

ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பியவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.அது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் தென்ஆப்பிாிக்காவை சேர்ந்த முதியவர். அவர் ஒரே வாரத்தில் சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டார். மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்த டாக்டர். 46 வயதான அவருக்கு எப்படி இந்த ஒமைக்ரான் வைரஸ் வந்தது என்று தெரியவில்லை. அவரை பெங்களூருவில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருடன் தொடர்பில் இருந்து 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மரபணு வரிசையை கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்  சர்வதேச நாடுகளில் இருந்து  திரும்புபவர்ளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. 

இந்த நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து திரும்பியவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக குஜராத் வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. 

இதையடுத்து, ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? எனபதை கண்டறிய  மரபணு வரிசை பரிசோதனைக்கு அவரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 


Next Story