மேல்சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: குமாரசாமி


மேல்சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: குமாரசாமி
x
தினத்தந்தி 4 Dec 2021 11:13 PM IST (Updated: 4 Dec 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

மேல்சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.

குமாரசாமி பேட்டி

கர்நாடக மேல்சபை தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று மைசூருவுக்கு குமாரசாமி வந்தார். அப்போது அவரிடம், ‘கர்நாடகத்தில் இருப்பது ஜனதாதளம் (எஸ்) அல்ல, ஜனதாதளம்(எப்) (குடும்ப கட்சி என்பதை குறிப்பிடுகிறார்)’ என்று சித்தராமையா பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்து குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

புதிய சட்டம்

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு சித்தராமையாவுக்கு எந்த தகுதியும் இல்லை. சித்தராமையாவின் மகன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்த அவருடைய மூத்த மகன், மறைமுக அரசியலில் இருந்தார். டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தில் 4 பேர் அரசியலில் உள்ளனர். மாநிலம் மற்றும் தேசிய அளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் அரசியலில் உள்ளனர்.

காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தைரியம் இருந்தால் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் அரசியலில் இருக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரட்டும். அதனை சட்டமாக்கி அமலுக்கு கொண்டு வரட்டும்.

எந்த முடிவும் எடுக்கவில்லை

கர்நாடக மேல்சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 6 இடங்களில் தான் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறோம், மேல்சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுபற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும். 2023-ம் ஆண்டு பொது தேர்தலை மனதில் வைத்து கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும்.

சரியானது அல்ல

அரசியல்வாதிகள் பொதுமேடையில் பேசும்போது மற்றவர்களின் சொந்த விஷயங்கள் பற்றி பேசக்கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்களை பேசி அவமானம் செய்வது சரியானது அல்ல. நானும் ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் பலரை விமர்சித்து பேசி உள்ளேன்.

பின்னர் எனது கட்சியினர், தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்போது தான் எனது தவறை நான் புரிந்து கொண்டேன். அதன்பிறகு பொது மேடைகளில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்து பேசியது கிடையாது. இதனை அனைத்து அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story