பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சேலம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சேலம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Dec 2021 2:10 AM IST (Updated: 5 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சேலம் வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம்,
பட்டமளிப்பு விழா
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.
கவர்னர் வருகை
இந்த விழாவில், முதுமுனைவர் பட்டம் பெறும் 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். இதுதவிர, 2019-2020 மற்றும் 2020-2021-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பட்டங்களை பெறுகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வருகிறார். 
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மதியம் 1 மணிக்கு வருகிறார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து இன்று இரவு பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தங்குகிறார்.
போலீஸ் பாதுகாப்பு
சேலத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதையொட்டி அவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் கவர்னர் நாளை பிற்பகலில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.


Next Story