நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் ‘டோஸ்’ தடுப்பூசியா? - நிபுணர் குழு இன்று பரிசீலனை


நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் ‘டோஸ்’ தடுப்பூசியா? - நிபுணர் குழு இன்று பரிசீலனை
x
தினத்தந்தி 6 Dec 2021 7:40 AM IST (Updated: 6 Dec 2021 7:40 AM IST)
t-max-icont-min-icon

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக கூடுதல் டோஸ் தடுப்பூசி போடலாமா என்பது பற்றி நிபுணர் குழு இன்று பரிசீலிக்கிறது.

புதுடெல்லி, 

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து மீள்வதற்கு நாடு முழு மூச்சுடன் போராடி வரும் வேளையில், அழையா விருந்தாளியாக ஒமைக்ரான் வைரஸ் வந்திருக்கிறது. இந்த வைரஸ் பரவலைத்தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் நிலையில் 3-வது தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) போட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

குறிப்பாக 40 வயது கடந்தவர்களுக்கு, 2 டோஸ் தடுப்பூசி போட்ட நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடலாம் என மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான ‘இன்சாகாக்’ அமைப்பின் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதற்கிடையே புனே சீரம் நிறுவனத்தார், கோவிஷீல்டு தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனரகத்திடம் விண்ணப்பித்துள்ளனர். அதில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்ற நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிற சூழலில் இதற்கு அனுமதி தாருங்கள் என கேட்டிருக்கிறது.

இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடலாமா என்று மத்திய அரசின் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இன்று (6-ந் தேதி) கூடி விவாதிக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. பூஸ்டர் டோசுக்கும், கூடுதல் டோசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.

முதன்மை தடுப்பூசியின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என கருதப்படும் முன் நிர்ணயம் செய்த காலத்துக்கு பிறகு போடுவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி. அதே நேரத்தில் முதன்மை தடுப்பூசி தொற்று நோயில் இருந்து போதுமான பாதுகாப்பை வழங்காதபோது, நோய் எதிர்ப்பு குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு போடுவதுதான் கூடுதல் டோஸ் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில், சிகிச்சையில் உள்ள புற்று நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளிட்டோர் இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கு தொற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி போடலாம் என தெரிய வந்துள்ளது.

Next Story