இந்தியாவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேர் 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை!


இந்தியாவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேர்  2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை!
x
தினத்தந்தி 6 Dec 2021 2:21 AM GMT (Updated: 6 Dec 2021 2:21 AM GMT)

இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்த திட்டம், முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் இந்த திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது வயது வந்த அனைவருக்கும் (18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரத்து 707 தடுப்பூசிகள் போடப்பட்டன. முதல் டோசாக 29 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 2-வது டோஸ் தடுப்பூசியை 75 லட்சத்து 12 ஆயிரத்து 602 பேர் போட்டுக்கொண்டனர். 84.8 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

அந்த வகையில் இதுவரை நாட்டில் 127 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 65 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து 71 ஆயிரத்து 752 ஆகும். 2 டோஸ்களும் செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 47 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 313 ஆகும்.

இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 50 சதவீதம் பேர், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, லடாக், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கை அடைந்து சாதனை புரிந்துள்ளன.

இது குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “வாழ்த்துகள் இந்தியா. தகுதி வாய்ந்த மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தற்போது முழுமையாக தடுப்பூசி (2 டோஸ்) செலுத்திக்கொண்டு விட்ட இந்த தருணம், மிகப்பெரும் பெருமிதத்துக்கு உரிய தருணம் ஆகும். நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டோர்  எண்ணிக்கை அதிகம். அதற்கு அடுத்தபடி  கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் உள்ளனர். மேலும், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31க்குள் நாட்டில் 100 சதவீதம்  முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இலக்கை அடைய அரசு தீர்மானித்துள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story