மத்திய பிரதேசம்; 9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!


மத்திய பிரதேசம்; 9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!
x
தினத்தந்தி 6 Dec 2021 6:24 AM GMT (Updated: 6 Dec 2021 6:24 AM GMT)

மத்திய பிரதேசத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால்,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன்படி, நேற்றைய காலை நேர நிலவரப்படி இதுவரை நாட்டில் 127 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 65 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து 71 ஆயிரத்து 752 ஆகும். 2 டோஸ்களும் செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 47 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 313 ஆகும்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதத்துடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மத்திய பிரதேசத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம் என உறுதி அளித்துள்ளார்.

முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியினை அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், இதுவரை 94 சதவீதம் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். 70 சதவீதம் மக்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இம்மாதம் 8,15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story