ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்:பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய மந்திரியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
புதுடெல்லி
ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷியாவின் ஏ.கே. 203 ரகத்தை சேர்ந்த 5 லட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்குப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷியாவின் கலாஸ்நிகோவ் நிறுவனத் தயாரிப்பான ஏ.கே. 203 வகைத் துப்பாக்கி குறைந்த எடை, வலிமை, பயன்பாட்டில் எளிமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டது. இதன்மூலம் 300 மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைக் குறிபார்த்துச் சுட முடியும்.
பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மாஸ்கோவுக்குச் சென்றபோது இவ்வகைத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கக் கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தியப் படைகளின் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்யவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் இரட்டை எஞ்சின்கள் கொண்ட காமோவ் 226 டி இலகு வகையைச் சேர்ந்த 200 ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.
ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எஸ்-400 ரக வான் பாதுகாப்பு தொகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெறவுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரஷிய தயாரிப்பான ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்க ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் இறுதியாகியிருப்பது, இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.கே. 203 ரக துப்பாக்கியை வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய சிறு ஆயுதங்கள் தொகுப்பு விடைபெறவுள்ளது.
ரஷியாவிடம் இருந்து வாங்கவுள்ள ஏ.கே.203 ரக துப்பாக்கி வாயு மூலம் இயங்கக்கூடியது. முந்தைய கேட்ரிட்ஜை விட, அதாவது துப்பாக்கி தோட்டாக்களில் இருக்கும் வெடி மருந்துகள் இதில் அதிகமாக இருக்கும். ஏ.கே. 203 ரக துப்பாக்கி ஆரம்பத்தில் ஏ.கே.103எம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் அதனை ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ் மேம்படுத்தினார். ஆயுத வல்லுநர்களை பொறுத்தவரை ரஷ்யாவின் இந்த தயாரிப்பு மிகவும் நம்பகமானது. நீடித்து நிலைக்க கூடியது. பராமரிப்பதும் எளிதானது. அதன் வடிவமைப்பு, தோட்டா பாயும் திறன், துல்லியம் என அனைத்திலும் சிறப்பானதாக இருப்பதாகவும் புகழ்கிறார்கள் ஆயுத வல்லுநர்கள்.
இந்த மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்தித்தனர். இதைப்போல இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசினர்.
தொடர்ந்து 4 மந்திரிகளும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story