நாகாலாந்து துப்பாக்கிச்சூடு; நடந்தது என்ன? - நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்
எல்லைப்பாதுகாப்பு படையில் 21 பேர் கொண்ட கமாண்டோ குழு மறைந்து திடீர் தாக்குதல் நடத்தியது.
புதுடெல்லி,
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், சுரங்கத்தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக நினைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களில் பொதுமக்கள் 13 பேர் மற்றும் ஒரு ராணுவ வீரர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறியதாவது;-
மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 21 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ குழு, கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் வாகனம் ஒன்று வந்தது. வாகனத்தை நிறுத்துமாறு சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக செல்ல முற்பட்டது. இதனால், அந்த வாகனத்தில் கிளர்ச்சியாளர்கள் தான் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தால் கமாண்டோ படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், வாகனத்தில் பயணித்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்பது பின்னர் தான் தெரியவந்தது. படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் கிராம மக்கள் அங்கிருந்த ராணுவ வீரர்களை சுற்றிவளைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2 வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும், சில வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனால், தங்களை தற்காத்துக்கொள்ளவும், கூட்டத்தை கலைக்கவும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர். உள்ளூர் நிர்வாகமும், போலீசாரும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்’ என்றார்.
Related Tags :
Next Story