கனமழை எதிரொலி : தென் மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் தக்காளி விலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Dec 2021 6:23 PM GMT (Updated: 6 Dec 2021 6:23 PM GMT)

தொடர் மழையால் தென் மாநிலங்களில் தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னை,

தென்னிந்தியாவில் கனமழை காரணமாக, வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளியின் விலை, சில்லறை விற்பனையில், கிலோவுக்கு ரூ.140 வரை உயர்ந்துள்ளது.
ஆனால் வட மாநிலங்கள் மற்றும் மேற்கு, கிழக்கு மாநிலங்களில் தக்காளியின் விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாட்டின் பெரும்பாலான சில்லறை விற்பனைச் சந்தைகளில் செப்டம்பர்-இறுதியில் இருந்துதான் தக்காளி விலை உயர்வது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக தென் மாநிலங்களில் தாமதமாக ஆனால் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு 60 ரூபாயாக உள்ளது. இது வழக்கமான சராசரியை விட மிக அதிகமாகும். 

வடமாநிலங்களில் இன்றைய நிலவரப்படி தக்காளியின் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு ரூ.30-83 என்ற அளவிலும், மேற்கு மாநிலங்களில் கிலோ ரூ.30-85 ஆகவும், கிழக்கு மாநிலங்களில் கிலோ ரூ.39-80 ஆகவும் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.102 ஆகவும், நெல்லையில், ரூ.92 ஆகவும், கடலூரில் ரூ.87 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.83 ஆகவும், தருமபுரியில் கிலோ ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ ரூ.83-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கேரளாவில், திருவனந்தபுரத்தில் கிலோ ரூ.125க்கும், பாலக்காடு மற்றும் வயநாட்டில் கிலோ ரூ.105க்கும், திருச்சூரில் கிலோ ரூ.94க்கும், கோழிக்கோட்டில் ரூ.91க்கும், கோட்டயத்தில் கிலோ ரூ.83க்கும் இன்று விற்பனையாகிறது.

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் துமகுருவில் கிலோ ஒன்றுக்கு ரூ.100-ம், தார்வார்டில் கிலோ ரூ.75, மைசூரில் ரூ.74, ஷிவமோகாவில் கிலோ ரூ.67, தாவணகெரேவில் கிலோ ரூ.64, பெங்களூரில் கிலோ ரூ.57-க்கும் விற்பனையாகிறது.

ஆந்திராவில், விசாகப்பட்டினத்தில் கிலோ ரூ.77-க்கும், திருப்பதியில் கிலோ ரூ.72-க்கும், தெலங்கானா வாரங்கலில் கிலோ ரூ.85-க்கும் விற்கப்பட்டது. புதுச்சேரியில் தக்காளியின் சில்லறை விலை இன்று கிலோவுக்கு ரூ.85 ஆக இருந்தது.

Next Story