இரண்டே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 120 ராயல் என்பீல்டு பைக்குகள்!
இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு, 120 வினாடிகளுக்குள் முடிவுக்கு வந்தது.120 ராயல் என்பீல்டு பைக்குகளும் 120 வினாடிகளில் விற்பனையாகி சாதனை படைத்தது.
புதுடெல்லி,
100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், தனது முதல் மோட்டார் சைக்கிளை லண்டனில் நடந்த ஸ்டான்லி சைக்கிள் கண்காட்சியில் 1901ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
ராயல் என்பீல்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், சிறப்பு எடிசனாக 60 ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 ரக மோட்டார் சைக்கிள்களும், 60 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி 650 ரக மோட்டார் சைக்கிள்களும் ஆன்லைன் மூலம் சிறப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்களின் முன்பதிவு நடத்தப்பட்டது.
அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு, 120 வினாடிகளுக்குள் முடிவுக்கு வந்தது. மொத்தம் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 120 ராயல் என்பீல்டு பைக்குகளும் 120 வினாடிகளில் விற்பனையாகி சாதனை படைத்தது.
இந்த சிறப்பு எடிசன் பைக்குகளில் அட்டகாசமான கருமை நிற கிராபிக்ஸ், எரிபொருள் டேங்க் மற்றும் கண்கவரும் ராயல் என்பீல்டு பேட்ஜ் உட்பட பைக்குடன் வரும் உதிரி பொருட்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும்,ஏற்கனவே இருக்கும் 3 வருட வாரண்டியுடன் சேர்த்து கூடுதலாக 4ம் மற்றும் 5ம் ஆண்டுகளுக்கான வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட சிறப்பு எடிசன் பைக்குகள் மொத்தம் 480 மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 120 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. மீதமுள்ள பைக்குகள் விரைவில் தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வர உள்ளன என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு ஆலையிலும் இந்த சிறப்பு எடிசன் பைக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story