எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; மேலவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மாண்பை மீறும் வகையில் செயல்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரையும் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவை துணைத்தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமளியால் அவை நடவடிக்கைகள் 5 முறை நேற்று ஒத்தி வைக்கப்பட்டன. நாள் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவையின் துணை தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் உறுப்பினர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி கேட்டு கொண்டார்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு உள்பட நாட்டில் எழுந்துள்ள விலை உயர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். எனினும், தொடர்ந்து அமளியில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவையின் துணை தலைவர் அவையை இன்றைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதன்பின்னர் இன்று காலை 11 மணிக்கு அவை கூடியது. எனினும், நாடாளுமன்ற மேலவையில் கூட்டத்தொடர் தொடங்கியதும், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கூட்டத்தொடரில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி அமளியில் ஈடுபட்டன.
தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மதியம் 3 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story